Tamil Sanjikai

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வரதப்பாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள நத்தம் என்ற ஊரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.

விஜயகுமாரின் தந்தை வரதராஜுலு ரெயில்வேயில் பணிபுரிந்ததால் அவர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கும், ஆந்திராவுக்கும் மாறி மாறி குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. படிப்பை முடித்ததும் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய விஜயகுமார், அதில் வருமானம் இல்லாததால் லாரி ஷெட், ரியல் எஸ்டேட், எல்.ஐ.சி. ஏஜெண்டு என பல தொழில்களில் ஈடுபட்டார்.

ஆனால், அவற்றிலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்காததால் ஆன்மிகத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் தன்னைத்தானே “கல்கி பகவான்” என்று அழைத்துக் கொண்டார். “நான் விஷ்ணுவின் அவதாரம்” என்று விளம்பரம் செய்ததால் அவருக்கு பண மழை கொட்டியது.

ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக அவரைத் தேடி வரத்தொடங்கினர் . இதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. இதையடுத்து சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள நேமம் கிராமத்தில் விஜயகுமார் முதலில் சிறியதாக ஆசிரமம் ஒன்றை கட்டினார். பிறகு ஆட்கள் வருகையும், வருவாயும் அதிகரித்ததால் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யா பாளையத்தில் மிக பிரமாண்டமான ஆசிரமத்தை கட்டினார்.

இந்த ஆசிரமத்துக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏராளமான கிளைகள் உள்ளன. அதுபோல அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா மற்றும் வளைகுடா நாடுகளிலும் கல்கி ஆசிரமத்துக்கு கிளைகள் இருக்கின்றன.

வெல்னஸ் குழுமம் என்ற பெயரில் கல்வி ஆசிரமம் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது. குறிப்பாக கட்டுமான துறையில் பல நூறு கோடி ரூபாய்களை கல்கி ஆசிரமம் முதலீடு செய்துள்ளது. வெளிநாடுகளிலும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர கோல்டன் லோட்டஸ், ட்ரீம் வியூ, ப்ளு வாட்டர் ஆகிய பெயர்களிலும் கல்கி ஆசிரமம் நிலங்களை வாங்கி குவித்துள்ளது. அந்த வகையில் கல்கி ஆசிரமத்திற்கு சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி வருமான வரித்துறையினருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

அந்த புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது கல்கி பகவான் என்று சொல்லிக்கொள்ளும் விஜயகுமார் பெயரிலும், அவரது மனைவி பத்மா பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, மருமகள் பிரிதா ஆகியோர் பெயர்களிலும் சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கல்கி ஆசிரமம் சுமார் 25 நாடுகளில் பினாமி பெயர்களில் ஓட்டல்கள், மால்கள், பண்ணை வீடுகள் வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும், கல்கி ஆசிரமத்திற்கு வேறு பெயர்களில் கப்பல்களும், சிறிய ரக விமானமும் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல்களை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 16-ந்தேதி கல்கி ஆசிரமத்திலும், அதன் கிளைகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். மொத்தம் 40 இடங்களில் 400 அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த சோதனையில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்களுக்கு இந்த சோதனை நீடித்தது.

ரூ.800 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்து இருப்பதால் அதுபற்றி விஜயகுமாரின் குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஆனால் முறையான பதில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் சோதனையில் கிடைத்த பணம்-நகை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விஜயகுமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கல்கி சாமியார் மகன் கிருஷ்ணன் மற்றும் மருமகள் பிரிதா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். நேற்று முன்தினம் வருமானவரி சோதனை நிறைவடைந்த நிலையில் இருவரும் ஆஜராகி உள்ளனர்.

கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

நாங்கள் எங்கும் ஓடி ஒளியவில்லை. நேமத்தில்தான் தங்கியிருக்கிறோம் என்று தங்களது பக்தக்ரளுக்கு வீடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார் கல்கி பகவானும், அவரது மனைவியும்.

அவர்கள் இருவரும் அமர்ந்தபடி தங்களது பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் பதிவாகியிருக்கும் இந்த வீடியோவில் அவர்கள் கூறியிருப்பதாவது, "ஆசிரமத்தில் எல்லா நடவடிக்கைகளும் இயல்பான வகையில் நடந்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. நாட்டை விட்டு வெளியேறவில்லை. எங்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் எங்களுக்கு எந்த உடல் நலப் பாதிப்பும் இல்லை. நாங்கள் நலமாகவே இருக்கிறோம்.

நாங்கள் எங்கும் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை. நேமம் ஆசிரமத்திலேயே இருக்கிறோம். வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன. யோகாவும் தியானங்களும் வழக்கமான வகையில் நடந்து வருகின்றன" என்று விஜயகுமார் கூறியுள்ளார்.

அவரது மனைவி பத்மாவதி "அற்புதமான சக்தியுடன் நான் உங்களுடன் உள்ளேன்" என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment