Tamil Sanjikai

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், இன்னும் மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன், ஜூலை மாதங்களுக்கான 40.43 டி.எம்.சி. நீரை கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மழை அளவைப் பொறுத்து தண்ணீர் திறக்கப்படுவதை, கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் கர்நாட அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து நொடிக்கு 500 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணையிலிருந்து நொடிக்கு 355 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீர் திறப்பானது படிப்படியாக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. திறந்து விடப்பட்டிருக்கும் தண்ணீரானது அடுத்த 3 நாட்களில் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும்.

கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 90.90 அடியாகவும், நீர் இருப்பு 8.10 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு நொடிக்கு 2 ஆயிரத்து 578 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி, கே.ஆர்.எஸ். திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

0 Comments

Write A Comment