Tamil Sanjikai

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக விரைவில் அவரது உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னாள் பிரதமரும் பா.ஜ.கவின் மூத்தத் தலைவருமான வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து அவரை கவுரவப்படுத்தும் வகையில் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 35 கிராம் எடை கொண்டதாக இருக்கும் இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் அவரது படத்துடன், ஸ்ரீஅடல் பிகாரி வாஜ்பாய் என்ற அவரது பெயர் தேவனாகிரி மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட உள்ளது.

அதற்கு கீழ் வாஜ்பாய் வாழ்ந்த காலத்தை குறிக்கும் வகையில் 1924 - 2018 என பொறிக்கப்பட உள்ளது. மேலும் நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் சிங்க முகம் அமைந்துள்ள அசோக சின்னம் பொறிக்கப்பட்டு, அதன் நடுவே வாய்மையே வெல்லும் என்பதை குறிக்கும் 'சத்யமேவ ஜெயதே' என்ற வாசகம் பொறிக்கப்பட உள்ளது. வாஜ்பாயின் உருவத்தின் ஒரு புறம் பாரத் எனவும், மறுபுறம் இந்தியா என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட உள்ளது. இதே போன்று சிங்க முகம் பொறிக்கப்பட்ட மற்றொரு பக்கத்தின் அடிப்பகுதியில் ரூபாய் 100 என்ற அடையாளம் பொறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

0 Comments

Write A Comment