Tamil Sanjikai

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து பெரும் போராட்டங்கள் கேரளாவில் வெடித்தது. தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடந்த நவம்பர் 15-ஆம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை 4 கட்டங்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது 3-ஆம் கட்டமாக டிசம்பர் 14 முதல் 29-ம் தேதி வரை 4026 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதில் ஐஜி ஸ்ரீஜித் தலைமையில், ஒரு டிஐஜி, 6 எஸ்பிக்கள், 29 டிஎஸ்பிக்கள், 90 இன்ஸ்பெக்டர்கள், 389 சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 230 பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 4-ஆம் கட்டமாக டிசம்பர் 29-ஆம் தேதி முதல் ஜனவரி 16-ஆம் தேதி வரை 4383 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்கிடையே போலீசாரின் வேண்டுகோளை ஏற்று சபரிமலையில் மேலும் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 16-ஆம் தேதி இரவு வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment