Tamil Sanjikai

உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் பசுவதை வதந்தியில் வன்முறை கும்பல் போலீஸ் அதிகாரியை கற்களை வீசி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே உள்ள மஹாவ் என்ற கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்தனர். பசு மாட்டை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் போராட்டதில் இறங்கினர்.

அங்குள்ள நெடுஞ்சாலையில் அவர்கள் மறியல் செய்யவே, போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். அப்போது, போராட்டக்காரர்கள் போலீசாரை தாக்கினர். அங்குள்ள காவல் நிலையம், காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால், நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனினும், கல் வீச்சு மேலும் அதிகரித்தது. கல்வீச்சில் போலீஸ் அதிகாரி சுபோத் குமார் சிங் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.
கல்வீச்சை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 வயது வாலிபர் ஒருவரும் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டை அடுத்து, கும்பல் கலைந்து சென்றது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. சுபோத் குமார் சிங், மாட்டுக்கறி வைத்துள்ளதாக கூறி அடித்துக்கொல்லப்பட்ட அக்தாலத் வழக்கை விசாரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment