Tamil Sanjikai

மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்தகுமார் இன்று காலமானார்.மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தனது மதிப்புமிக்க நண்பரை இழந்து விட்டதாகவும் , இளம் வயதில் பொது வாழ்க்கையில் நுழைந்த அவர், சிறந்த தலைவராக விளங்கியதாகவும் ,அனந்தகுமாரின் நல்ல செயல்கள் அவரை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்றும் அந்த இரங்கல் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

1959-ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த அனந்தகுமார் சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வந்தார். கல்லூரியில் படித்தபோது அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந்தார். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் அனந்தகுமாரும் சிறையில் அடைக்கப்பட்டார். பா.ஜ.க. இளைஞரணித் தலைவராக இருந்த அவர், 1996-ம் ஆண்டு மக்களவைக்கு போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யாக, கடந்த 2014-ஆம் ஆண்டு 6-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனந்தகுமார், மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஒத்திவைப்புத் தீர்மானத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விமான ஒப்பந்தம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அனலை கிளப்பியபோது, நாடாளுமன்ற விதிகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கூறி, அனந்த்குமார் பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment