Tamil Sanjikai

சென்னையில், திரிபுரா சீட்டுக்கம்பெனியில் பணம் கட்டிய 25 ஆயிரம் வியாபாரிகள், 400 கோடி ரூபாயை இழந்து தவிப்பதாக வியாபாரிகள் சங்க பேரவையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். குருவி சேர்ப்பது போல சேர்த்த பணத்தை, கர்நாடகத்தைச் சேர்ந்த சீட்டு மோசடிக் கும்பலிடம் இழந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

தமிழகத்தில் 124 கிளைகள், சென்னையில் மட்டும் 34 கிளைகள் என சுமார் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சிறு, குறு வியாபாரிகளை குறிவைத்து வாரிச்சுருட்டியதாக திரிபுரா சீட்டு நிறுவனத்தின் மீது, இதுவரை 25 ஆயிரம் புகார்கள் குவிந்துள்ளன..!

சென்னை சைதாப்பேட்டையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த திரிபுரா சீட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா,கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களை தொடங்கி கடைகள் தோறும் சென்று வியாபாரிகளிடம் தினந்தோறும் சீட்டுப்பணத்தை வசூலித்து கோடிகளை வாரிக் குவித்துள்ளனர்.

10 ஆயிரம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை ஏலச்சீட்டுக்கு என்று தினமும் வசூல் செய்துள்ளனர். 20 மாதங்கள் வசூல், முடிவில் அல்லது தேவைப்படும் நேரத்தில் தள்ளுபடி போக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பதால், வியாபாரத்தில் முதலீடு செய்ய உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சிறுகச் சிறுக சேர்த்த தங்களது பணத்தை வியாபரிகள் பலரும், திரும்பப் பெற இயலாமல் 2 வருடங்களாக தவித்து வருகின்றனர்.

இது தொடர்பான மோசடி வழக்கை பதிவு செய்துள்ள சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்துள்ள நிலையில், கிருஷ்ணபிரசாத், அவரது மனைவி சுமன்னா, வேணுகோபால், பாலா, ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து வழக்கை எதிர்கொண்டுவருகின்றனர். முக்கிய நபரான வாசு என்பவரை இதுவரை கைது செய்ய முடியவில்லை..!

இந்த வழக்கை பொறுத்தவரை, திரிபுரா சீட்டு நிறுவனத்தின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மடக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், தங்களிடம் பணம் கட்டிய வியாபாரிகளுக்கு பணத்தை திரும்ப கொடுத்து விடுவோம் என்று முதலில் உறுதியளித்த திரிபுரா சீட்டு நிறுவனம் திட்டமிட்டு ஏமாற்றியதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

தமிழகத்தில் மட்டுமே சீட்டு மோசடியில் ஈடுபட்டுள்ள திரிபுரா சீட்டு நிறுவனம் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இன்றுவரை சீட்டு பணத்தை வசூல் செய்து வருகிறது. திரிபுரா சீட்டு நிறுவனத்தின் பினாமி சொத்துக்களையும் முடக்கி பணத்தை மீட்டு தரவேண்டும் என்ற கோரிக்கையுடன் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாகவும் அறிவித்துள்ளனர்.

தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை, சுக துக்கங்களை மறந்து கடைக்குள்ளேயே முடங்கி கிடந்து சிறுகச் சிறுக சம்பாதித்த பணத்தை, திரிபுரா நிறுவனத்திடம் பறி கொடுத்து விட்டு, தங்களுக்கு பணம் திரும்ப கிடைக்குமா ? என்ற ஏக்கத்துடன் வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment