Tamil Sanjikai

கேரளா மாநிலம் சபரிமலையில் இருமுடி கட்டிவந்த திருநங்கைகளுக்கு தலைமை தந்திரி அனுமதியளித்தை அடுத்து அவர்கள் கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் சேலை அணிந்து சென்று தரிசனம் செய்தனர். சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதை அமல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்துள்ளது. ஆனாலும் பக்தர்கள் போராட்டம் காரணமாக இதுவரை இளம்பெண்கள் யாரும் சபரிமலை செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கோட்டயம், மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் அவந்திகா, அனன்யா, திருப்தி, ரெஞ்சுமோள் ஆகிய 4 பேர் கடந்த 16-ஆம் தேதி சபரிமலைக்கு இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கச் சென்றனர். அவர்கள் எரிமேலி வழியாகப் பம்பைக்கு செல்ல முயன்ற போது, போலீஸார் அவர்கள் 4 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

திருநங்கைகள் தாங்கள் முறைப்படி விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்துள்ளோம் என்று போலீஸாரிடம் தெரிவித்தனர். ஆனால் திருநங்கைகளை சபரிமலை கோயிலுக்குள் அனுமதித்து, அங்கிருக்கும் சிலர் இவர்களை மறித்து போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கில் சிக்கல் ஏற்படும் என்று கருதி, அவர்கள் 4 பேரும் சபரிமலை செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, அவர்கள் கோட்டயத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து திருநங்கைகள் 4 பேரும் கேரள போலீஸ் ஐ.ஜி.மனோஜ் ஆபிரகாமை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். இந்நிலையில் திருநங்கைகள் நான்கு பேரும், உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழுவில் உள்ள போஸீஸ் டிஜிபி ஹேமச்சந்திரனை நேற்றுச் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

திருநங்கைகள் சபரிமலையில் செல்ல கோர்ட்டு தடை எதுவும் இல்லாததால் அவர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சட்ட வல்லுனர்களும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, கோயில் தந்திரிகள் மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தாரிடம் ஹேமச்சந்திரன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்களின் அனுமதியின் பெயரில் திருநங்கைகள் 4 பேரையும் சாமி தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர். எர்ணாகுளத்தில் இருந்து எருமேலிக்கு இன்று அதிகாலை வந்த 4 திருநங்கைகள் இன்று காலை பம்பைக்கு சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலை அணிந்து செல்லக்கூடாது என்று போலீஸார் தெரிவித்த நிலையில் இன்று திருநங்கைகள் சேலை அணிந்து சபரிமலைக்கு காலை 8 மணிக்கு பம்பையில் இருந்து புறப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட திருநங்கைகள் நான்கு பேரும், 9.45 மணிக்கு கருப்பு சேலை அணிந்து, தலையில் இருமுடி கட்டுடன் சென்ற அவர்கள் 18-ம் படி வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்ததோடு, நெய் அபிஷேகமும் செய்தனர். பின்னர் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் பகல் 11.30 மணி அளவில் அவர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி வந்தனர். அதன்பின் அங்கிருந்து அவர்கள் பாதுகாப்புடன் பம்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருநங்கைகளாக பிறந்த எங்களுக்கு இன்று சபரிமலையில் தரிசனம் செய்ததன் மூலம் விமோசனம் கிடைத்துள்ளது. சேலை எங்களுக்கு சவுகரியமான ஆடை. அதனால் அதனை அணிந்து கோவிலுக்கு வந்தோம். எங்களுக்கு இன்று சிறப்பான தரிசனம் கிடைத்தது. அதற்கு உதவி செய்த போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று திருநங்கைகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment