திருப்பதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஸ்வீட் பாக்சில் திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விரும்பி பெற்றுச்செல்வது லட்டு பிரசாதம். இதற்காக தினந்தோறும் 3 லட்சம் லட்டுகள் வரை தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த லட்டுகளை பக்தர்கள் கொண்டு செல்வதற்காக தேவஸ்தானம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பதி நகரில் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருமலையிலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த விதிமுறை யை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 20 ஆயிரத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்படும் மற்றும் கடை லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் பக்தர்களுக்காக வழங்கப்படும் லட்டுகள் பிளாஸ்டிக் பைகளில் வழங்கப்பட்டு வருவதை தவிர்க்கும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், விஐபி தரிசனத்தில் வரும் பக்தர்கள், கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்வீட் கடைகளில் வழங்குவது போல் ஸ்வீட் பாக்சில் லட்டு பிரசாதங்கள் வழங்கும் திட்டம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக 1 லட்சம் ஸ்வீட் பாக்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இவை நடைமுறைக்கு கொண்டுவந்த பின்னர் இதை கொண்டு செல்வதில் பக்தர்களுக்கு சுலபமாக உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா? என்பது போன்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதில் பக்தர்களிடையே போதிய வரவேற்பு இருந்தால் அதுக்கு ஏற்ப விரைவில் இந்த முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments