திருப்பதியில் நாளை முதல் நெகிழிக்கு தடை!
திருப்பதி திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி, ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து திருப்பதி கோயிலிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமலையில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் உடைமைகள், அவர்கள் கொண்டு வரும் பொருட்கள், திருப்பதியில் உள்ள கடைகள் என அனைத்து இடங்களிலும் நாளை முதல் திருமலை முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? எனச் சோதனை நடத்தப்பட இருக்கிறது. அப்படி பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.
அதனை மீறி கொண்டுவந்தால் 5000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். திருமலையில் உள்ள ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக் கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த கூடாது. திருமலையில் இயங்கும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தேவஸ்தானத்தில் இந்த முடிவுக்கு பக்தர்கள், கடை உரிமையாளர்கல் ஒத்துழைக்க வேண்டும். இந்த உத்தரவை திருமலைக்கு வரும் அனைவரும் கவனத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தற்போது கோவிலில் லட்டுகளை போட்டுத் தரும் கவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டு கவர்களை மட்டும் பயன்படுத்த தேவஸ்தானம், நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளது.
0 Comments