Tamil Sanjikai

அடுத்து இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புழலில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக பருவ நிலை மாறி இதமான குளிர் நிலவுகிறது.
நவம்பர் 1-ம் தேதி பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தம் நிலவுகிறது.

இதேபோல் இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் தென் தமிழகத்தில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னையிலும் 3 நாட்களாக மழை நீடிக்கிறது.

அதையடுத்து வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களிலும் பருவ மழை பெய்யும். தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கும் பரவும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 2 நாட்களுக்கு 3-ம் தேதி வரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.

இலங்கைக்கு கிழக்கே தற்போது குறைந்த காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளது. அது வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும் போது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. வரும் 6-ம் தேதி புயல் காற்றுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தமிழகத்தில் பரவலாக மழை நீடிக்கும்.அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment