Tamil Sanjikai

சொத்து குவிப்பு வழக்கில் எம்.எல்.ஏ.வுக்கு தண்டனை!

சொத்து குவிப்பு வழக்கில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது தந்தைக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் என்பவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை ஆனந்தன் 2007, 2008 -ம் வாக்கில் புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராக பணியாற்றியுள்ளார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, சட்டமன்ற உறுப்பினர் அசோக் மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பான விசாரணையில் ஆனந்தன் ரூ.3.15 கோடி அளவிற்கு சொத்து சேர்த்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையை அடுத்து இறுதி தீர்ப்பில், சட்டமன்ற உறுப்பினர் அசோக் மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தனர். இருவருக்கும் தலா ஒரு வருட சிறை தண்டனை அறிவித்த, நீதிபதி தனபால் 1 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த ரூ.1.50 கோடி ரூபாயை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment