Tamil Sanjikai

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்கால தடை

தமிழகத்தில், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்திற்கு அனுமதி மறுத்தது.

இந்நிலையில் டாடா நிறுவனம் சமர்பித்த ஒரு மனுவை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வக பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. கடந்த அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்ற விசரணையின் போது தமிழக அரசு, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆஜரான ஆர். ராகேஷ் சர்மா உள்ளிட்ட வழக்கறிஞர்கள், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், நியூட்ரினோ திட்டம் தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்தது. அதில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அளித்த அனுமதிக்கு தடைவிதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. மத்திய அரசு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

0 Comments

Write A Comment