Tamil Sanjikai

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கு மக்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பிறகு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெங்கடேஷ் நாயக் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். கைது செய்யப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள், அமைப்புகளின் தலைவர்கள், அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள், அவற்றின் முகவரி, அவர்கள் எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரம் ஆகியவற்றை கேட்டிருந்தார்.

தகவல் தொடர்புகள் மற்றும் இணையதள சேவைகளைத் துண்டித்தது, ரேடியோ, தொலைக்காட்சி, ஒலி, ஒளிபரப்புகளை தடைசெய்தது, சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றியது, அரசியல் கட்சித் தலைவர்களையும், மற்றவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது குறித்த விவரங்களை வெங்கடேஷ் கேட்டிருந்தார். ஆனால் இவை குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும், கைது செய்யப்பட்டவர்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்துக்கு மட்டுமே தெரியும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பதால், அக்டோபர் 31 ஆம் தேதி முதல் தான் மத்திய அரசின் திருத்தச்சட்டம் அமலுக்கு வருகிறது. அதன் பிறகு தான் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் அமலுக்கு வரும். 2018 ஆம் ஆண்டு, டிசம்பர் 19 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் இல்லையென்று எப்படிக் கூறலாம் என்றும் வெங்கடேஷ் நாயக் கேட்டிருந்தார். மாநில நிர்வாகம் குறித்த அனைத்து அதிகாரங்களும் குடியரசுத்தலைவருக்கு மாற்றப்பட்டுவிட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படிதான் நடக்கிறது என்று ஞாயிறு அன்று வெங்கடேஷ் கூறினார்.

0 Comments

Write A Comment