Tamil Sanjikai

தன் மீது தொடரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேச அவர்களுக்கு தடை விதிக்கவும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கவும், உத்தரவிட கோரிக்கை வைத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல்வர் குறித்து பேச 7 பேருக்கும் தடைவிதித்தும், வழக்கு குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு கோரிய வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது, மேத்யூ சாமுவேலின் மனு குறித்து முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூலை 4 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

0 Comments

Write A Comment