Tamil Sanjikai

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். நாளை சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார். இதற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார். பின்னர் கிழக்கு டெல்லியில் உள்ள ஏ.எஸ்.என் பள்ளிக்கு சென்றார். அங்கு உள்ள மாணவ - மாணவியர்களுடன் கலந்துரையாடினார். கிம் ஜங்-சூக் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இன்று மாலை உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேரும் அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரிக்கிறார். லக்னோவில் இருந்து நாளை அயோத்திக்கு செல்லும் கிம் ஜங்-சூக், சரயு நதிக்கடையில் நடைபெறும் பிரமாண்ட தீப உற்சவத்தில் பங்கேற்கிறார். பின்னர், அயோத்தியில் ராணி ஹர் ஹூவாங்-ஓக் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி இளவரசியான சூரிரத்னா என்பவர் தென் கொரியாவுக்கு சென்று அந்நாட்டு மன்னரை மணந்த பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உ.பி.யில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கிம் ஜங்-சூக் 7-ம் தேதி காலை சிறப்பு விமானம் டெல்லி சென்று, அங்கிருந்து தென்கொரியாவுக்கு புறப்படுகிறார். தென்கொரிய அதிபரின் மனைவி வருகையை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

0 Comments

Write A Comment