இந்தியாவில் நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் சிறப்பு விமானம் மூலம் நேற்று முன் தினம் டெல்லி வந்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதன்பின் உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேர்ந்த அவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரித்தார். அயோத்தி இளவரசியான சூரிரத்னா கி.பி. 48-ம் ஆண்டு வாக்கில் தென் கொரியாவுக்கு சென்று அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அயோத்தி இளவரசி அழைக்கப்பட்டார். வரலாற்றுக் குறிப்புகளில் அவரது பெயர் ஹூ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றை நினைவுகூரும் வகையில் கொரிய அரசின் ஒத்துழைப்புடன் உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரில் ஹூ-வின் பெயரால் சுமார் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் சரயு நதிக்கரை ஓரத்தில் உள்ள பூங்காவுக்குள் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யாநாத்துடன் நேற்று அயோத்தி நகருக்கு வந்த தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக், அந்த நினைவிடத்தை திறந்து வைத்தார். பின்னர், அயோத்தி நகரில் உள்ள சரயு நதிக்கரையில் நேற்றிரவு மூன்று லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபோத்சவ நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார். இன்று ஆக்ரா நகருக்கு வந்த கிம் ஜங்-சூக், முகலாய மன்னர் ஷாஜஹானால் மும்தாஜின் நினைவாக உருவாக்கப்பட்ட உலக அதிசயமான தாஜ்மஹாலைப் பார்வையிட்டார்.
0 Comments