Tamil Sanjikai

2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள இந்தியாவின் 70-வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் 70-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக இந்தியா விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்ரிக்க அதிபர், குடியரசு தின விழாவில் நடைபெற உள்ள ராணுவம் மற்றும் தளவாடங்களின் அணிவகுப்பை பார்வையிட உள்ளார். காந்திய கொள்கைகள் மீது தீவிர ஈடுபாடு கொண்டவரான தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா, தென்னாப்ரிக்க முன்னாள் அதிபரான மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு நெருக்கமானவராக இருந்தவர். இவர் காந்தி நடை என்ற பெயரில் கடந்த ஏப்ரல் ஜோகன்ஸ்பர்க் நகரில் மக்களை திரட்டி பேரணி நடத்தினார். 2014 - 2018 வரை துணை அதிபராக இருந்த இவர், நிறவெறிக்கு எதிரான தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர். இந்தியாவின் 70-வது குடியரசு தின விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இசைவு தெரிவிக்காத நிலையில், தென்னாப்ரிக்க அதிபர் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment