Tamil Sanjikai

கேரளாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களது உடல்களை தோண்டி எடுத்து விசாரணை நடத்தியதில் சொத்துக்கு ஆசைப்பட்டு உறவுக்கார பெண்ணே 6 பேருக்கு விஷம் வைத்து தீர்த்து கட்டியது அம்பலமானது. இதுதொடர்பான உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி அருகே உள்ள கூடத்தொரை பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவர் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அன்னம்மாள். இவர் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றார். இவர்கள் இரண்டு பேரும் தங்களது மகன் ரோய் தாமஸ் மற்றும் உறவினர்கள் மேத்யூ, பீலி, அல்பன் ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். ஜான் தாமஸ் பெயரில் ஏராளமான சொத்துகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜான் தாமஸ் மர்மமான முறையில் இறந்தார். இதைத்தொடர்ந்து அன்னம்மாள், ரோய் தாமஸ் உள்பட 6 பேரும் மர்மமான முறையில் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.

இதையொட்டி இவர்களுடைய உடல்களை உறவினர்கள் புதைத்து விட்டனர். இந்த நிலையில் 6 பேர் சாவிலும் மர்மம் இருப்பதாக அவர்களுடைய உறவினர்கள் போலீசில் புகார் கூறி வந்தனர். ஆனால் இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து அவர்களுடைய உறவினர்கள் தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மர்மமான முறையில் இறந்த 6 பேரின் உடல்களையும் மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி 6 பேரின் எலும்புக்கூடுகளையும் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் அவர்கள் 6 பேரும் விஷம் (சயனைடு) கொடுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஜான் தாமசின் உறவுக்காரப்பெண் ஜோலி (வயது 45) என்பவரை கைது செய்தனர். மேலும் இவருக்கு சயனைடு கொடுத்த நகைக்கடை ஊழியர்களான மேத்யூ, பிஜுகுமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சொத்துக்காக ஆசைப்பட்டு ஜோலி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரையும் உணவில் விஷம் வைத்து கொன்றது விசாரணையில் அம்பலமாகி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment