Tamil Sanjikai

டெல்லி பாஜக தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி எம்.பி. ஜிவிஎல் நரசிம்மராவ் மீது காலணி வீசப்பட்டது.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜிவிஎல் நரசிம்மராவ், டெல்லியில் கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

போபால் தொகுதியில் சாத்வி பிரக்யா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது குறித்து அவர் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

இந்துத்வா செயற்பாட்டாளரான சாத்வி பிரக்யா சிங் மீது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொய்யான தீவிரவாத வழக்குகள் புனையப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் ஜிவிஎல் நரசிம்மராவை நோக்கி காலணியை வீசினார்.

காலணி ஜிவிஎல் நரசிம்மராவ் மீது படவில்லை. காலணியை வீசிய நபர் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஜிவிஎல் நரசிம்மராவ், செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார். இத்தகைய செயல்களை கண்டு தாங்கள் அஞ்சிவிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார். காலணி வீசிய நபர் யார், எதற்காக வீசினார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

0 Comments

Write A Comment