Tamil Sanjikai

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜிநாமா செய்த நிலையில், ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாகவும் இருந்த சக்திகாந்த தாஸ், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசின் முன்னாள் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக இருந்த இவர், மூன்று வருடங்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசாவில் 1957-ஆம் ஆண்டு, பிப்ரவரி 26-ஆம் தேதி பிறந்த சக்திகாந்த தாஸ் , வரலாற்றுத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். இந்திய ஆட்சிப் பணி சேவையில் 1980-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி சேர்ந்தார். அவருக்கு தமிழக பிரிவு ஒதுக்கப்பட்டது. தமிழக அரசின் தொழிற்துறையின் செயலராகவும், தமிழக டி.என்.பி.எல் தலைவர் மற்றும் இயக்குநர், டைட்டன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர், தமிழ்நாடு பெட்ரோ பிராடக்ஸின் தலைவர், மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைவர், எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் தலைவர், இந்தியன் வங்கியின் கெளரவ தலைவர், தென்னிந்திய பெட்ரோலிய தொழிற்துறை கழகம் மற்றும் வெடிப்பொருள் துறையின் இயக்குநர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். அதோடு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றியவர்.

சக்திகாந்த தாஸ் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பொருளாதார விவகாரங்களின் செயலராக இருந்தவர். மேலும் ரிசர்வ் வங்கியுடன் நெருக்கமாக பணிபுரிந்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநரை தொடர்ந்து,இந்திய நிதி ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் சக்திகாந்த தாஸ், ஜி20 யின் இந்திய பிரதிநிதியாகவும் உள்ளார். முதலில் இந்திய நிதியமைச்சகத்தில் வருவாய் துறையின் செயலாளராக பிரதமரால் நியமிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ், பின்னர் பொருளாதார விவகாரங்கள் துறைக்கு மாற்றப்பட்டார்.

அதன் பின் 2016-ஆம் ஆண்டில், இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு விவகாரத்தை அமலாக்கும் முதன்மை முகங்களில் ஒன்றாக விளங்கினார். 2017-ஆம் ஆண்டு மே மாதம், ரிசர்வ் வங்கி, ஒரு ரூபாய் நோட்டை சக்திகாந்த தாஸின் கையெழுத்துடன் வெளியிட்டது. பிரதமர் மோடியின் முதன்மை செயலராக உள்ள நிருபேந்திர மிஸ்ராவுக்கு மிக நெருக்கமானவராக சக்திகாந்த தாஸ் கருதப்படுகிறார்.

0 Comments

Write A Comment