Tamil Sanjikai

கேரளாவில் முந்தைய காங்கிரஸ் முதல்வரான உம்மன்சாண்டி ஆட்சியின்போது, வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களுக்கு சூரிய மின்சக்திக்கான தகடுகள் அமைத்துக் கொடுப்பதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரில் சரிதா நாயர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, அமைச்சர் ஹபி ஈடன் உள்ளிட்டோர் மீது சரிதா நாயர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த விவகாரம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோலார் பேனல் மோசடி தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில், தன்னை சோலார் பேனல் வழக்கில் சிக்க வைத்த காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடப்போவதாக சரிதா நாயர் கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஹபி ஈடனை எதித்துக் எர்ணாகுளம் தொகுதியில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தார்.

அத்துடன் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதால் அந்தத் தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் எர்ணாகுளம், வயநாடு தொகுதிகளில் சரிதா நாயர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட முடிவு செய்து அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவுடன் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் ராகுலை எதிர்த்து அவர் சுயேச்சையாகக் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவருக்கு பச்சை மிளகாய் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

0 Comments

Write A Comment