Tamil Sanjikai

மத்தியப் பிரதேசத்தில் அனுமதி பெற்று, உத்தரப் பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள சோன் என்கிற தங்க ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இங்கு நேற்று இரவு திடீர் சோதனை நடத்திய தமிழரான மணிகண்டன் ஐஏஎஸ் அதிகாரி , 11 லாரிகளுடன் மணல் கொள்ளையரை கையும் களவுமாகப் பிடித்துள்ளார். உ.பி.யில் நக்சலைட்டுகள் நடமாட்டம் கொண்ட ஒரே மாவட்டமாகக் கருதப்படுவது சோன்பத்ரா. ஜார்கண்ட், பிஹார் மற்றும் ம.பி. ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் இது அமைந்துள்ளது. இங்கு ம.பி.யில் தொடங்கி சோன் எனும் ஆறு ஓடுகிறது. சோன் ஆற்றில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வந்துள்ளது. இதன் மீது அம்மாவட்ட முன்னாள் பாஜக செயலாளர் கமலேஷ் திவாரி, தன் கட்சி ஆளும் உ.பி. அரசு மீது புகார் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு சோன் ஆறு ஓடும் கோராவல் தாலுக்கா பகுதியில் உதவி ஆட்சியரான மணிகண்டன் திடீர் சோதனை மேற்கொண்டார். அதில், செனியா கிராமத்தில் ஆற்றங்கரையில் மணலை அள்ளி 11 லாரிகளில் நிரப்பிக் கொண்டிருந்த வாகனங்கள் சிக்கின. இதில் இருவரின் உரிமங்களும் தவறாகப் பயன்படுத்தியதாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆற்றங்கரைகளைச் சுரண்டி மணல் அள்ளி வந்தவர்களைப் பிடித்தமைக்காக உ.பி.யில் மணிகண்டனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

0 Comments

Write A Comment