டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் சரணடைய ஒரு மாதம் அவகாசம் அளிக்க விடுத்த கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களான சத்வாந்த சிங் மற்றும் பீண்ட் சிங்கால் சுட்டுக்கொல்லப் பட்டார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக புகார் எழுந்தது. முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமார் மீது மேற்கு டெல்லியில் உள்ள ஜானக்புரி, விகாஸ்புரி ஆகிய காவல் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 1984-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, சோகன் சிங், அவரது மருமகன் அவதார் சிங் என்ற 2 சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜானக்புரி காவல் நிலையத்திலும் மறுநாள் குர்சரண் சிங் என்ற சீக்கியர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் விகாஸ்புரி காவல் நிலையத்திலும் சஜ்ஜன் குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டன.
விசாரணை நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் கவுன்சிலர் கோஹர் உள்ளிட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம், சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என அறிவித்ததோடு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சஜ்ஜன் குமார் சரண் அடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்தநிலையில் சஜ்ஜன் குமார் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் "தனக்கு 3 குழந்தைகளும், 8 பேரக்குழந்தைகளும் இருப்பதால் அவர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுக்க தனக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அதனால் தீர்ப்பு வழங்கப்பட்டபடி சரணடைந்து தண்டனையை ஏற்றுக் கொள்ள ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரது கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. அதனால் சஜ்ஜன் குமார் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக சரணடைய வேண்டும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
0 Comments