சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியுள்ளதாக வந்த தகவலை அடுத்துக் கோவில் நடை சாத்தப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிலிருந்து 50வயதுக்குட்பட்ட பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படாமல் இருந்தது. இதை எதிர்த்தும் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்த அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் கோவிலில் வழிபாடு நடத்தப் பெண்கள் முயல்வதும், அதைத் தடுக்க இந்து அமைப்பினர் போராட்டம் நடத்துவதும் என 3மாதங்களாக மாறிமாறிப் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிந்து என்கிற வழக்கறிஞரும், கனகதுர்க்கா என்கிற பெண்ணுரிமைச் செயல்பாட்டாளரும் இன்று அதிகாலை மூன்றே முக்கால் மணியளவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டுத் திரும்பியதாக கூறியுள்ளனர். ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் இருவரும் ஆண்களைப் போல் உடையணிந்து சென்றதாகவும், சாதாரண உடையணிந்த இருபதுக்கு மேற்பட்ட காவலர்கள் அவர்களின் பாதுகாப்புக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 18 படிகள் ஏறிச் சென்று தரிசிப்பதற்கு பதில் சன்னிதானத்திற்கு பின்புறமாக உள்ள வழியாக அவர்கள் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது.
இப்போது சபரிமலையில் வழிபாடு நடத்திய பெண்கள் இருவரும் ஏற்கெனவே டிசம்பர் பதினெட்டாம் நாள் கோவிலுக்குச் செல்ல முயன்று, அங்கிருந்த அய்யப்ப பக்தர்களால் தடுத்து திரும்ப அனுப்பப்பட்டனர். இதனிடையே பெண்கள் வழிபாடு நடத்தியதாக வந்த தகவலை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது. பரிகார பூஜைக்காக நடை அடைக்கப்பட்டுள்ளதாகவும், பரிகார பூஜை முடிந்த பிறகு நடை திறக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா, சபரிமலைக்கு யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பது தங்கள் கடமை என்றும், அவர்களது வயது மற்றும் பிற விவரங்களை சரிபார்ப்பது தங்கள் பொறுப்பல்ல எனவும் பதிலளித்துள்ளார்.
0 Comments