Tamil Sanjikai

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி,`தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்’ மூலம் சசிகலா - சந்திரலேகா சந்திப்பு பற்றிய சிறைக் குறிப்பைப் பெற்றிருக்கிறார்.

இதுபற்றிப் பேசும் நரசிம்மமூர்த்தி, ``சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்தே அவர் சிறைத்துறை விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது. அதைச் சிறைத்துறை அதிகாரி ரூபாவும் உறுதி செய்தார். ஆனாலும், தற்போது வரை சசிகலாவுக்காகப் பல சலுகைகள் வழங்கப்பட்டு தான் வருகின்றன. இதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து உறுதி செய்தேன்.

`கர்நாடக சிறைத்துறை விதி 1978 பிரிவு 603-ன் படி, சிறையில் உள்ள சிறைவாசிகளைச் சந்திப்பதற்குச் சாதாரணமாக 4 பேரை அனுமதிக்கலாம். தவிர்க்க முடியாத பட்சத்தில் நெருங்கிய உறவினர்களாக இருந்தால் மட்டுமே கூடுதலாக 2 நபரை அனுமதிக்கலாம்’ என்று சிறைத்துறை விதி தெரிவிக்கிறது.

சிறைவாசியான சசிகலாவைக் கடந்த 20-ம் தேதி 1. சந்திரலேகா ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி (குடும்ப நண்பர்) 2. தினகரன் (அக்கா மகன்) 3. அனுராதா (மருமகள்) 4. ஜெயஹரிணி (பேத்தி) 5. தேவதிராஜன் (குடும்ப நண்பர் ) 6. புகழேந்தி (குடும்ப நண்பர் ) என 6 பேர் மதியம் 1 மணியிலிருந்து 1.45 வரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு சந்திப்பின்போதும் 6 பேரை அனுமதிக்கிறார்கள்.

சாதாரணமாக ஒரு சிறைவாசியை 4 பேர் மட்டுமே பார்க்க முடியும். தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே குடும்ப உறவினர்கள் 2 பேரைச் சந்திக்க அனுமதிக்கலாம்’ என்று சிறைத்துறை விதிமுறைகல் கூறுகின்றன . 6 பேரும் சசிகலாவை தவிர்க்க முடியாத என்ன காரணத்துக்காக சந்தித்தார்கள். ஏற்கெனவே சசிகலா சிறை விதிகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருக்கும்போது, எப்படி சிறைத்துறை 6 பேரை சந்திக்க அனுமதித்தது. பெங்களூரு சிறைத்துறை தொடர்ந்து சசிகலாவுக்கு சலுகைகள் காட்டி வருவது சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்புடையது அல்ல.

இதே பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வாசலில், `தன் மாமனார் இறந்த தகவலை’ சிறையில் உள்ள கணவரிடம் சொல்ல காலையிலிருந்து மாலை வரை இரண்டு பெண்கள் காக்க வைக்கப்பட்டனர். பிறகு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பணபலமும், அதிகாரபலமும் உடையவர்கள் சர்வ சாதாரணமாகச் சிறைக்குள் சென்று வருகிறார்கள். இந்தியாவில் சிறைச்சாலைகள் பணக்காரர்களுக்குச் சொர்க்கமாகவும் ஏழைகளுக்கு நரகமாகவும் இருக்கிறது'' என்றார்.

0 Comments

Write A Comment