கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் இருமுறை கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி கணிசமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் . இதனால் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ள கேரள அரசு சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்க ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் சபரிமலை நோக்கி சென்ற மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் சுரேந்திரனை போலீசார் கைது செய்து கொட்டாரக்காரா கிளைச் சிறையில் காலை அடைத்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய சுரேந்திரன், போலீசார் தன்னைத் தாக்கியதாகவும், குடிநீர், உணவு, மருந்து எதையும் தரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, போலீசார் பல்வேறு கெடுபிடிகள் காட்டுவதாக நேற்று இரவு சன்னிதானம் பகுதியில் தீடீர் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவை மீறியதாக பக்தர்களை சில தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் முன்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் கெடுபிடிகளை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக யுவ மோர்ச்சா தெரிவித்துள்ளது.
0 Comments