Tamil Sanjikai

மும்பையில் இந்த ஆண்டு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. மும்பையின் பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கரில் மிக கனமழையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். 4 கல்லூரி மாணவிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்தனர்.

மும்பையில் பல சாலையில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது. தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் நீரில் நீந்தியபடி செல்கின்றன.

கனமழை மற்றும் வெள்ளம் சூழ்நிலையால், சியோன் மற்றும் குர்லா இடையேயான அனைத்து ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது என மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது. இதேபோன்று கல்யாண் மற்றும் தானே ரெயில் நிலையங்கள் கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் ரெயில் பயணிகள் விடுமுறை நாளில் வெளியே எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

இதுபற்றி மும்பையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ந்து காற்று வீசக்கூடும் எனவும் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கடல் இன்று சீற்றமுடன் காணப்படும் என்றும் அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மித்தி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் அப்பகுதி கரையோர மக்கள் 400 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் குர்லா பகுதியில் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் பொறுப்பு படையை சேர்ந்த 8 குழுக்கள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மும்பையில் சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகம் ஆக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மும்பை, தானே மற்றும் பால்கர் பகுதிகளில் நாளை காலை வரை கனமழை நீடிக்கும். மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மிக அதிக கனமழை பெய்யும். இதனால் அப்பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டது.

0 Comments

Write A Comment