ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதையடுத்து, அந்த வழக்கை சிறப்புப் புவனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வெளியான நிலையில், விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
ரஃபேல் ஒப்பந்தத்திற்கான செயல்முறைகளை சந்தேகிப்பதற்கு எந்த காரணமும் இல்லை எனவும், ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகளிலும் சந்தேகத்திற்கு இடமான அம்சங்கள் இல்லை எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
வெறும் அனுமானத்தின் அடிப்படையில் கூறப்படும் புகார்களால் எந்த பலனும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், ரஃபேல் விமானங்களுக்கான விலையை தீவிரமாக பரிசீலித்ததாகவும், அவை ரகசியமாகவே இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
5ம் தலைமுறைக்கான போர்விமானங்கள் இந்திய விமானப்படைக்கு அவசியம் என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ரஃபேல் விமானங்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நீதிமன்றத்தின் வேலையில்லை என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். 36-க்கு பதிலாக 126 விமானங்கள் வாங்க வேண்டும் என்று மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ரஃபேல் விமானங்களின் தரத்திலும் உச்சநீதிமன்றத்திற்கு எந்த சந்தேகமும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், ஒப்பந்தம் மூலமாக வர்த்தக ரீதியாக சிலருக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என விளக்கமளித்துள்ளனர்.
வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதால் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை தேவையில்லை எனக் கருதுவதால் மனுக்களனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு ஒட்டு மொத்தமாக திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக கூறியதோடு, டசால்ட் நிறுவனம் இந்தியாவில் துணை நிறுவனத்தை தேர்வு செய்ததில் மத்திய அரசின் தலையீடு எதுவும் இருப்பதாக தெரியவில்லை எனவும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. பின்பற்றப்பட்ட வழிமுறைகளில் சந்தேகம் இல்லாத நிலையில் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை எனவும் தீர்ப்பில் திட்டவட்டமாகத் குறிப்பிட்டுள்ளது.
0 Comments