Tamil Sanjikai

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரத்தில் உள்ள போலீசார், பப்ஜி, ப்ளேயர் ஆன்லைன் பேட்டில் கிரவுன்டு விளையாட்டை கூகிள் ப்ளே ஸ்டாரில் இருந்து பதிவிறக்கம் செய்ய ராஜ்கோட் நகரத்தில் உள்ள அன்ரொய்ட் நுகர்வோர்களுக்கு தடை விதிக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. கடிதம் அனுப்பி ஒரு மாத காலமாகியும் கூகுள் நிறுவனத்திடமிருந்து இதுவரை அவர்களுக்கு பதில் எதுவும் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது

இந்தியாவில் மட்டும் ஒரு கோடி 20 லட்சம் பப்ஜி விளையாடுபவர்கள் உள்ளனர். இந்நிலையில் பப்ஜி விளையாட்டு மூலம் நிறைய குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.. இதனைக் கவனத்தில் கொண்டுதான் குஜராத் அரசு, கடந்த மாதம் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதா என்பதைமாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டுமென சுற்றறிக்கை விடுத்தது. முன்னதாக நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனக் குஜராத் மாநில குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தியது.

இந்நிலையில் ராஜ்கோட் போலீசார் பப்ஜி விளையாட்டை தற்காலிகமாக தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி ராஜ்கோட்டில் 2 மாதத்திற்கு (அதாவது மே மாதம் முதல் வாரம் முடியும் வரை) பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுவதாகவும், யாரேனும் பப்ஜி விளையாட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் சட்ட விதி 188ன் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுமட்டுமில்லாமல் பப்ஜி விளையாடுபவர்கள் குறித்தான தகவல் தெரிந்தும் காவல் துறைக்கு தெரிவிக்காமல் இருந்தாலும் சட்ட விதி 188ன் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை 15 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ள அனைவரும் இளைஞர்கள். அவர்கள் யாரையும் இதுவரை கைது செய்யாமல், அறிவுரை மட்டும் வழங்கி அனுப்பியுள்ளனர் காவல்துறை.. ஆனால் இது தொடருமேயானால் ஆறு மாத காலம் வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்க படலாம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

முதன்முதலில் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்த போது பெரும்பாலானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால் இந்த விளையாட்டின் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு , இதை முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது என கருதி, தான் இந்த விளையாட்டிற்கு தடை விடிக்கப்பட்டுள்ளது என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment