Tamil Sanjikai

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் வீடுகளையும், உடமைகளையும் இழந்த மக்களுக்கு விரைவில் உரிய நிவாரணம் கிடைக்க, தன்னால் முடிந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என வயநாடு எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பருவமழையின் கோரத் தாண்டவதால் கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்து விட்டன. கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளா, தற்போது கண்ணீர் தேசமாக மாறி விட்டது. மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வயநாடு தொகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட அத்தொகுதி எம்.பி. ராகுல்காந்தி, மேப்பாடி பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கேரள முதல்வர் மற்றும் பிரதமரிடம் வயநாடு மக்களின் பிரச்னைகள் குறித்து தெரிவித்து, உரிய நிவாரணம் பெற்றுத் தர தேவையான நடவடிக்கை எடுப்பேன் என்றும் ராகுல் காந்தி உறுதி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கட்சி வேறுபாடின்றி அனைவரும் உதவுவது மகிழ்ச்சி அளித்தாலும், வயநாடு மக்களவை தொகுதி மக்களுடனான தனது முதல் சந்திப்பு, இப்படி துக்கமாக அமையும் என தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் ராகுல்காந்தி வேதனை தெரிவித்தார்.

0 Comments

Write A Comment