Tamil Sanjikai

36 ரஃபேல் ரக போர் விமானங்களை, பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால், இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியும், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இது விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை, மூடி முத்திரையிட்ட உறையில் மத்திய அரசு நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. அதில், கடந்த 2013-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட விதிகளின் அடிப்படையிலேயே போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் மனுதாரர்களிடம் அளிக்கப்பட்டன. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது, மனுதாரர்கள் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க இருக்கிறார்கள்.

முன்னதாக ,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பதிவிட்ட டுவிட்டில் , ரஃபேல் விவகாரத்தில் திருட்டு நடைபெற்றுள்ளதை உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளார். விமானப்படையிடம் கேட்காமலேயே ஒப்பந்தத்தில் மாற்றங்களை செய்து, அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிப்பதற்கு மிகவும் அவசியமான ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தாமதம் செய்தது. ராகுல் காந்தியின் அரசியல் தோல்வியடைந்துவிட்டதால், தேவையில்லாத சர்ச்சைகளை எழுப்பி வருகிறார். ராகுல் காந்தியின் தோல்வியடைந்த அரசியலுக்கு பொய் கூறுவது பதிலாக மாறிவிடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment