Tamil Sanjikai

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் எம்.பி. ஆவார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் டெல்லியில் உள்ள பிரனீத் கவுருக்கு சில நாட்களுக்கு முன்னர் கைபேசியில் அழைப்பு வந்துள்ளது. பேசிய நபர், தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் மேலாளர் என தன்னை அறிமுகப்படுத்தி, சம்பளத்தை டெபாசிட் செய்வதற்காக வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டுள்ளார்.

வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் பின், சிவிசி மற்றும் ஓடிபி எண் அனைத்தையும் அந்த நபர் கேட்டுப் பெற்றுள்ளார். சிறிது நேரத்திலேயே பிரனீத் கவுரின் வங்கிக் கணக்கில் இருந்து 23 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரனீத் கவுர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, கைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்து, மோசடி நபரை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கைது செய்துள்ளனர். வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி, யார் கேட்டாலும் எந்த சூழ்நிலையிலும் வங்கிக் கணக்கு, ஏடிஎம் பின், ஓடிபி போன்ற விவரங்களை தெரிவிக்கக் கூடாது என வங்கி நிர்வாகிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இதை கவனத்தில் கொள்ளாமல், ஒரு மாநில முதலமைச்சரின் மனைவியும், எம்.பி.யுமான பிரனீத் கவுர் 23 லட்ச ரூபாயை இழந்தது மற்றவர்களுக்கு எச்சரிக்கை மணி.

0 Comments

Write A Comment