Tamil Sanjikai

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பாகிஸ்தான் எல்லையிலும் புகுந்த இந்திய விமானப்படை, அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து அழித்தது, இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே உறவு பதற்றமான சூழலை எட்டியது.

புல்வாமா தாக்குதல் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமாவில் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் பின்னணியை கண்டறிய அமெரிக்காவின் உதவியை இந்தியா நாட உள்ளது. புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி தனது திட்டத்தை செயல்படுத்தும் போது சிம் கார்டு இல்லாத அதிநவீன மொபைல் ஃபோன் தகவல் தொடர்பை கையாண்டுள்ளான்.

இந்த சிம் கார்டுகள் விர்ச்சுவல் சிம் (மெய்நிகர் சிம்) என்று அழைக்கப்படுகின்றன. கணினி வழியாக தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு ஸ்மார்ட்போனில் செயலியை டவுன்லோடு செய்வதன் மூலம் அந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்தலாம். இந்த முறைக்கு சிம் கார்டு தேவைப்படாது. இதுவே ;விர்ச்சுவல் சிம்” என்று கூறப்படுகிறது.

இந்த வகை ”விர்ச்சுவல் சிம்” மூலமே புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டதையும் இவை அமெரிக்காவிலிருந்து வழங்கப்பட்டதையும் இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. எனவே, அந்த மெய்நிகர் அடிப்படையிலான சிம் உடன் இணைக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்கள், அதன் பயன்பாட்டை தொடங்கியவர்கள், அதன் ஐ.பி எண் உள்ளிட்ட தகவல்களை அமெரிக்காவிடம் இருந்து கேட்டுப்பெற இந்திய புலனாய்வு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment