Tamil Sanjikai

அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் இன்றும் நாளையும் போராட்டம் நடத்த உள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும், புயல் பாதிப்பால் சேதம் அடைந்த அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் உட்பட நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

டெல்லி வந்த விவசாயிகள் இந்தூர் ரயில் நிலையத்தில் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ரயில் மறியலில் ஈடுபட்டதுடன் கழுத்தில் மண்டை ஓடுகளை தொங்க விட்டு நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனிடையே, போராட்டத்திற்காக டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு பல்வேறு மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் வந்துகொண்டே இருக்கின்றனர். இன்று ராம் லீலா மைதானத்தை ஒன்று கூடும் விவசாயிகள் நாளை காலை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். போராட்டத்தில் எந்த கலவரங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக டெல்லியில் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment