மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வாரகாலமாக அரசு மருத்துவர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர். எஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 10-ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் அந்த நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர்கள் இருவரை தாக்கினர். இதனை கண்டித்து கடந்த கடந்த 11-ஆம் தேதி முதல் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஒருநாள் வேலை நிறுத்தம் நடத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது. இதையடுத்து தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கருப்புப் பட்டை அணிந்து மருத்துவர்கள் பணிபுரிந்தனர். சென்னையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்தும் தலைக்கவசம் அணிந்தும் போராட்டம் நடத்தினர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பேச்சுவார்த்தைக்கு வருமாறு மருத்துவர்களுக்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று மேற்குவங்கத்தில் உள்ள 14 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து தலா இரு பிரதிநிதிகளும், சுகாதாரத்துறை பேருந்தின் மூலம் கொல்கத்தா தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஊடகங்கள் முன்னிலையில் மருத்துவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, பணியிட பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர் குறை தீர்ப்பு மையங்கள் அமைக்க வேண்டும், காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரை குறை தீர்ப்பு மைய நடுவராக நியமிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொண்டதை அடுத்து போராட்டத்தை விலக்கி கொள்வதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
0 Comments