Tamil Sanjikai

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை துல்லியமாக, காலதாமதமின்றி வெளியிட தேவையான அணைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு சுற்று வாக்குகள் 30 நிமிடங்களில் எண்ணப்படும் என்றும், அதன் முடிவுகள் eci.gov.in அல்லது elections.tn.gov.in இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார். ஓட்டர் ஹெல்ப்லைன் செயலியின் மூலமும் அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஒப்புதலுக்குப் பின்னரே தேர்தல் அதிகாரி முடிவை அறிவிப்பார் என்றும் சாகு தெரிவித்தார்.

வாக்கு மையங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், ஆயுதப் படை, துணை ராணுவம், போலீஸ் என 41 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகளும், குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 19 சுற்றுகளும் எண்ணப்பட உள்ளதால், வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிவடையும் காலநேரத்தை கணக்கிட முடியாது எனவும் அவர் கூறினார்.

0 Comments

Write A Comment