உலக நாடுகளை போல நதிகள் வழியாக உள்நாட்டு நீர்வழிபோக்குவரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1986-ம் ஆண்டு, கங்கை- பாகிரதி-ஹூக்ளி நதியமைப்பில் ஹால்தியா-அலகாபாத் இடையிலான ஆயிரத்து 620 கிலோ மீட்டர் தூரத்தில் தேசிய நீர்வழி எண் ஒன்றாக அறிவிக்கப்பட்டு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வந்தது. அவ்வழியே பெப்ஸி நிறுவனத்தின் குளிர்பானங்கள் ஏற்றிக் கொண்டு 16 கன்டெய்னர்கள் கொண்ட ரவீந்திரநாத் தாகூர் பெயரிடப்பட்ட சரக்குக் கப்பல் இன்று கொல்கத்தாவிலிருந்து ஆயிரத்து 360 கிலோமீட்டர் பயணித்து வாரணாசி சென்றடைந்தது. இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தில் முதல் சரக்குக் கப்பலான ரவீந்திரநாத் தாகூரை பிரதமர் மோடி வாரணாசியில் இன்று வரவேற்றார். அதன் பின் வாரணாசி கங்கையில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உலக வங்கியின் நிதியான 5 ஆயிரத்து 369 கோடியுடன் , ஜல் மார்க் விகாஸ் ((Jal Marg Vikads)) திட்டத்தின் கீழ் இந்த உள்நாட்டுக்குள்ளான நீர்வழிப்போக்குவரத்து சாத்தியமாகியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத குறைந்த செலவுப் போக்குவரத்தான இது அதிக பயனளிக்கும் எனவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 500 முதல் 2 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நீர்வழி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி ஹல்தியா-வாரணாசி இடையில் கங்கை ஆற்றில் சுமார் 2 ஆயிரம் எடையுடன் சரக்கு கப்பல்கள் சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்த திட்டம் ஹல்தியா, சாஹிப்கஞ்ச், வாரணாசி ஆகிய பகுதிகளில் சரக்கு முனையங்கள் அமைத்து விரிவுப்படுத்தபடும். உ.பி. முதல்- மந்திரி யோகி ஆதித்யாநாத் மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
0 Comments