Tamil Sanjikai

கொலிஜியம் பரிந்துரைத்த நான்கு நீதிபதிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், நான்கு மாநில நீதிபதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ், கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், அவர்களுக்கு சீனியாரிட்டி குறைவாகவே உள்ளது என்று கூறி மத்திய அரசு முதலில் நிராகரித்துவிட்டது.

இதைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட இருவரது பெயரை மத்திய அரசுக்கு மீண்டும் கொலிஜியம் பரிந்துரைத்தது. இவர்கள் தவிர, பாம்பே உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவை (Justice B.R.Gavai) மற்றும் ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி சூர்யா கந்த் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட நால்வரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட 27 நீதிபதிகள் உள்ளனர். எஞ்சியுள்ள 4 பணியிடங்களுக்கு, தற்போது புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் 31 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment