Tamil Sanjikai

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கருவி நேற்று அதிகாலையில் நிலவின் மேற்பரப்பில் இறங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நிமிடங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லேண்டர் கருவி தொடர்பை இழந்தது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த நிகழ்வில் பின்னடைவு ஏற்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த ஏமாற்றமும், சோகமும் அடைந்துள்ளனர். அவர்களை பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தேற்றினர். இதைப்போல சந்திரயான்-2 திட்டத்துக்காக பல்வேறு அரசியல் தலைவர்களும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.

அமித்ஷா பாராட்டு

இது தொடர்பாக பா.ஜனதா தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா தனது டுவிட்டர் தளத்தில், ‘சந்திரயான்-2 திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இதுவரை அடைந்திருக்கும் சாதனைகள் அனைத்தும் ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய செய்துள்ளது. ஈடுபாடும், கடின உழைப்பும் கொண்ட நமது விஞ்ஞானிகளுடன் இந்தியா உறுதியாக இருக்கிறது. அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது வாழ்த்து செய்தியில், ‘இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைய சாதித்துள்ளனர். இன்னும் ஏராளம் சாதிப்பார்கள். ஒட்டுமொத்த நாடும் உங்களுடன் இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

சோனியா, ராகுல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘நிலவில் நாம் இருப்போம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இன்று இல்லை என்றால் நாளை; ஒரு நாட்டு மக்களாக இணைந்திருக்கிறோம். சந்திரயான்-2 விண்கல பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஒட்டுமொத்த தேசமும் பின்தொடர்ந்தது. இந்த திட்டம் இறுதியில் வெற்றியடையவில்லை என்றாலும், அதன் ஒவ்வொரு தடைகளும் எதிர்கால வெற்றிக்கு படிக்கல்லாக அமையும். இஸ்ரோவுக்கும், அதன் திறமையான ஊழியர்களுக்கும் நாடு கடன்பட்டிருக்கிறது’ என்று புகழாரம் சூட்டினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் தளத்தில், ‘சந்திரயான்-2 திட்டத்துக்காக அயராது உழைத்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். உங்கள் ஆர்வமும், அர்ப்பணிப்பும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. உங்கள் உழைப்பு வீண்போகாது. விண்வெளியில் பல லட்சிய திட்டங்களுக்கு இது அடிக்கல்லாக அமையும்’ என்று பாராட்டு தெரிவித்து இருந்தார்.

யோகி ஆதித்யநாத்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒவ்வொருவரையும் நினைத்து பெருமை அடைகிறோம். பின்னடைவுகளும் பயணத்தின் ஒரு பகுதிதான். அவை இன்றி வெற்றி இல்லை. ஒட்டுமொத்த தேசமும் உங்களை நம்புகிறது, உங்களுடன் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘நமது விஞ்ஞானிகளால் நாம் மிகுந்த பெருமை அடைகிறோம். அவர்களின் தொலைநோக்கு, ஈடுபாடு மற்றும் விடாமுயற்சி போன்றவற்றால் நமக்கு வற்றாத உத்வேகம் அளிக்கின்றனர்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாலிவுட் நடிகர்கள்

மேலும் முதல்-மந்திரிகள் நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஹர்சவர்தன், ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் தலைவர்கள் ரந்தீப் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ் உள்பட பல்வேறு தலைவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர்.

இதைப்போல பாலிவுட் பிரபலங்கள் பலரும் சந்திரயான்-2 திட்டப்பணிகளுக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கூறி உள்ளனர். அதன்படி நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அக்‌ஷய் குமார், அஜய்தேவ்கன், இம்ரான் ஆஷ்மி, பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோரும் பாராட்டி உள்ளனர்.

0 Comments

Write A Comment