புல்வமா தாக்குதல் குறித்து இன்று மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக்குழு அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்வீடனில் இருந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசரமாக நாடு திரும்பினார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “ பல கனவுகளோடு இருந்த, தாக்குதலில் வீரமரணம் அடைந்த எமது வீரர்களின் கனவுகளை கலைய விட மாட்டோம். தீவிரவாதிகளே நீங்கள் பெரிய தவறு இழைத்து விட்டீர்கள்; அதற்கான பெரிய விலையை நீங்கள் திருப்பிக் கொடுக்கச் செய்வோம்.
புல்வாமா தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகள் மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள்; உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இது போன்ற உணர்ச்சிமிக்க விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது. இந்தியாவை சீர்குலைக்க முடியும் என்று அண்டை நாடு கருதினால், அதை அந்த நாடு மறந்துவிட வேண்டும். ஒருபோதும் அது நடக்காது” என்றார்.
0 Comments