Tamil Sanjikai

டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தேபாரத் அதிவேக விரைவு ரயிலை பிரதமர் நரேந்திரமோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்று எனக் கூறப்பட்டும் டிரெயின் 18, சென்னை ஐ.சி.எஃப். ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கபப்ட்டது. சதாப்தி விரைவு ரயிலை விட கூடுதல் வசதிகளுடன் வந்தேபாரத் எனப் பெயரிடப்பட்ட இந்த ரயிலை டெல்லி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரயிலின் முதல் ஓட்டத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பிரதமர் மோடி இந்த ரயிலில் உள்ள வசதிகளை ஆய்வு செய்தார்.

அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடைய வந்தேபாரத் அதிவேக விரைவு ரயில் டெல்லியில் இருந்து 9 மணி நேரம் 45 நிமிடத்தில் வாரணாசியை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 ஏ.சி. பெட்டிகளுடன் ஆயிரத்து 128 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.

தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ். சார்ந்த ஒலி - ஒளி பயணிகள் தகவல் தொடர்பு அமைப்பு வைஃபை வசதி, பிரத்யேக வசதிகளுடனான இருக்கை அமைப்பு, நவீன வசதிகளுடன் கழிவறைகள், ஒவ்வொரு பெட்டியிலும், உணவுக்கூடம் உள்ளிட்ட வசதிகள் இந்த ரயிலில் உள்ளன.

0 Comments

Write A Comment