Tamil Sanjikai

சென்னை விமான நிலையத்தில் கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார், செய்தியாளர்களிடம் பேசும்போது , மேகதாது அணை இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும். சேமிக்க வேண்டிய நீரை ஒவ்வொரு ஆண்டும் வீணாக கடலுக்குச் செல்வதை தடுக்க மேகதாது அணை தேவை. மேகதாது அணை கட்டினால் அதில் 67 டிஎம்சி நீரை சேமிக்க முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா 177 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கவேண்டும். சரியான அளவு மழை இல்லாத சமயத்தில், மேகதாது அணை இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் அணையாக இருக்கும். அந்த நீரை சேமித்துவைக்க முடியும். இந்த ஆண்டு தமிழகம் மற்றும் கர்நாடகா அந்த நீரை பயன்படுத்த முடியவில்லை. அந்த நீர் கடலுக்குச் சென்றது. அதை தடுத்து, சேமித்தால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

நான் தமிழ்நாட்டோடு சண்டையிட விரும்பவில்லை. நாம் சகோதரர்கள். என்னுடைய பல சகோதரர்கள் தமிழகத்தில் வசிக்கிறார்கள். அதேபோல, பல தமிழ் சகோதரர்கள் கர்நாடகாவில் வசிக்கிறார்கள். இருவரும் சண்டையிட விரும்பவில்லை. தமிழக மக்களிடமும், தமிழக முதல்வரிடமும் இருகரம் கூப்பி வேண்டிக்கொள்கிறேன். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். மேகதாது அணையைப் பற்றி நாங்கள் ஒருமுறை விளக்க வாய்ப்பு கொடுங்கள். அரசியல் கட்சிகள் என்ற பிரிவினைகள் இல்லாமல், அதிகாரபூர்வமாக அல்லது தனிப்பட்ட முறையில் வந்தாலும் சரி, உங்களை அழைத்துச் சென்று விரிவாக விளக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மேகதாது அணை பயனுள்ளதாக இருக்கும் என தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய அரசியல் கட்சிகளில் உள்ளவர்களுக்கு தெரியும். அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் காரணமாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. நான் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் ஒன்று சேர்ந்து, கட்சி பேதமின்றி வாருங்கள். நாங்கள் விளக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் சொல்வது உங்களுக்கு ஏற்றுக்கொள்ளுவதாக இருக்கிறதா என்று பாருங்கள். ,'' என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் மேகதாது அணையின் கட்டுமானம் தொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்டபோது, உச்சநீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அந்த முடிவை நாங்கள் பின்பற்றுவோம். ஒவ்வொரு மாதமும் நாங்கள் அளிக்க வேண்டிய நீரின் அளவு தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது . அதை மீறமாட்டோம். மேகதாது அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு எங்களிடம் விரிவான திட்ட அறிக்கையை கேட்டுள்ளது. முன்னராக, பூர்வாங்க அறிக்கை ஒன்றை அளித்தோம். தற்போது நாங்கள் அணையை கட்ட முடியாது. அணை கட்ட மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும். மத்திய அரசு தமிழ்நாடு, பாண்டிசேரி மற்றும் கேரள அரசுகளை அழைத்து கருத்துகளை கேட்பார்கள். பின்னர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி வேண்டும். இதன் பின்னர்தான் அணை கட்டமுடியும் என்று தெரிவித்தார்.

0 Comments

Write A Comment