Tamil Sanjikai

குடியேற்றத்துறை சோதனை தேவைப்படாத பாஸ்போர்ட் (ECNR - Emigration Check Not Required) வைத்திருப்பவர்கள், மத்திய வெளியுறவுத்துறையின் இணையதளத்தில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்வது அவசியமாகும்.

2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து இந்தப் புதியமுறை நடைமுறைக்கு வருகிறது.

இந்தப் புதிய நடைமுறை குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ இந்தப் புதிய விதிமுறையின் நோக்கமே உயர்ந்த படிப்பு படித்து அயல்நாடுகளில் சாதாரண வேலைக்குச் செல்லும் இந்தியர்களைப் பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்பட்டதாகும்.

இதன்படி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், லெபனான், லிபியா, மலேசியா, சூடான்,தெற்கு சூடான், சிரியா, தாய்லாந்து, ஏமென் ஆகிய 18 நாடுகளுக்குச் செல்பவர்கள் வெளியுறவுத்துறையில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட் என்பது குடியேற்றத்துறை சோதனை தேவைப்படும் பாஸ்போர்ட்(ECR - Emigration Check Required ). இந்த பாஸ்போர்ட்டில் முத்திரையிட்டு வழங்கப்படும். அதேசமயம், 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குமேல் படித்தவர்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட் (ECNR ) என்பது குடியேற்ற சோதனை தேவையில்லாத பாஸ்போர்ட்டாகும்.

அந்த வகையில் குடியேற்ற சோதனை தேவைப்படாத பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், வருமானவரி செலுத்துபவர்கள் 18 நாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்கு 24 மணிநேரத்துக்குள்ளாக வெளியுறவுத்துறையின் www.emigrate.gov.in. என்ற இணையதளத்தில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமல் செல்ல முயன்றால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை புள்ளிவிவரங்கள்படி, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்குத்தான் இந்தியர்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 1.50 லட்சம் இந்தியர்கள் வேலை பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா (78,611), குவைத் (56,380), ஓமன் (43,332),கத்தார் (24,759) பேர் பணியில் உள்ளனர்.

கொத்தனார்களாக 52,833 பேரும், சாதாரண தொழிலாளர்களாக 49,490 பேரும், தச்சுவேலைப் பணியில்41,588 பேரும், உதவியாளர்களாக 2 லட்சத்து 6 ஆயிரத்து700 பேரும் உள்ளனர்.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் இருந்து 88,450 பேரும், அதைத் தொடர்ந்து பிஹாரில் 69,246 பேரும், தமிழகத்தில் இருந்து 38,341 பேரும், மேற்கு வங்கத்தில் இருந்து 36,599 பேரும், ராஜஸ்தானில் இருந்து 32,184 பேரும் பணியாற்றுகின்றனர் “ எனத் தெரிவிக்கின்றனர்.

0 Comments

Write A Comment