Tamil Sanjikai

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தின் விஜய்பூர் தொகுதியில் (ஷியோபூர் மாவட்டம்) பாஜக சார்பில் போட்டியிட்ட சீதாராம் ஆதிவாசி பலம்வாய்ந்த காங்கிரஸ் வேட்பாளரான ராம்நிவாஸ் ராவத்தை வீழ்த்தி முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

55 வயதான உள்ளூர் பாஜக தலைவரான சீதாராம் ஆதிவாசி தனது மனைவி இமார்தி பாய் ஆகியோர் அவருக்கு சொந்தமான 600 சதுர அடி நிலத்தில் கூரையால் வேயப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

பொது மக்களுக்காக அயராது உழைக்கும் சீதாராம், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத குடிசை வீட்டில் வசித்து வருவதால் அவருக்காக சொந்தமாக வீடு ஒன்றை கட்டிக்கொடுக்க தொகுதி மக்கள் முன்வந்தனர். இதற்காக அவர்களாகவே 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை நன்கொடையாக நிதி திரட்டத் தொடங்கினர். தேவையான அளவு பணம் .பெறப்பட்டு தற்போது அவருக்காக இரண்டு அறைகள் கொண்ட வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏ ஒருவருக்கு தொகுதி மக்களே நிதி திரட்டி வீடு கட்டிக் கொடுக்கும் அளவிற்கு அவர் என்ன தான் சாதித்து விட்டார் என்று தொகுதிவாசியான தன்ராஜ் என்றவரிடம் பேசிய போது, எங்கள் நலனிற்காக அயராது உழைப்பவர் சீதாராம், எந்த நேரத்திலும், எந்தவித கட்டாயமும் ஏற்படாத நிலையிலும் எங்களுக்காக வந்து தோள் கொடுப்பவர் அவர். ஏழ்மை நிலையில் இருக்கும் இவர் குடிசை வீட்டில் வசித்து வருவதால் அவருக்காக கைகொடுக்கும் வகையில் வீடு கட்டித் தர தீர்மானித்து தற்போது பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார் தன்ராஜ்.

பொதுமக்களின் அன்பால் நெகிழ்ச்சியடைந்துள்ள எம்.எல்.ஏ சீதாராம், தனது முதல் சம்பளத் தொகை கிடைக்கும் போது அதனை பொதுமக்களின் நலனுக்காக செலவிடுவேன் என்று தெரிவித்தார். இது குறித்து அவருடைய மனைவி கூறும்போது தொகுதி மக்களுக்காக தனது கணவர் கடுமையாக உழைப்பதால் அவர்கள் அவரை நேசிக்கின்றனர் என்றார்.

உள்ளூர் மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்ற சீதாராம், பொதுமக்களின் அன்பால் ஈர்க்கப்பட்டு திக்குமுக்காடியிருக்கிறார் எம்.எல்.ஏ சீதாராம் .

கடந்த ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீதாராம், முன்னதாக 3 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஒருமுறை சுயேட்சையாகவும், இரண்டு முறை பாஜக சார்பிலும் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

0 Comments

Write A Comment