Tamil Sanjikai

கள்ளத்துப்பாக்கி விற்பனையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த பான்சிங் தாக்கூர், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருச்சியில் கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்தாண்டு ஜனவரி 26ஆம் தேதி திருச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கள்ளத் துப்பாக்கிகளை விற்க முயன்ற காவலர் பரமேஸ்வரன் என்பவரிடமிருந்து, இரண்டு துப்பாக்கிகளுடன் 10 தோட்டக்களையும் சேர்த்து கைப்பற்றினர். இதையடுத்து, பரமேஸ்வரன் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டு காவலர் பரமேஸ்வரனின் கூட்டாளிகளான நாகராஜ், சிவா, எட்டப்பன், கலைசேகர், திவ்யபிரபாகரன், கலைமணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு துப்பாக்கி விற்பனை செய்த மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமுராரி திவாரி என்பவரையும் சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த பான்சிங் தாக்கூர் என்பவரை பலமுறை மத்தியபிரதேசம் சென்று தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பான்சிங் தாக்கூர் போபாலில் தங்கியிருப்பதாக சிபிசிஐடி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துது. அதன்படி, போபால் சென்ற காவல்துறையினர் கடந்த 27ஆம் தேதி பான்சிங் தாக்கூரை கைதுசெய்தனர். தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் பான்சிங் தாகூரை திருச்சிக்கு அழைத்து வந்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஷகிலா பேகம் முன்பு ஆஜர்படுத்தினர்.

அவரை வருகிற 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, பான்சிங் தாக்கூரை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

0 Comments

Write A Comment