Tamil Sanjikai

வட இந்திய மக்களின் பிடித்த இனிப்பு வகைகளில் ஒன்றான, ரசகுல்லா தற்போது நாடு முழுவதும் பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றாக விளங்குகிறது. பால், எலுமிச்சை சாறு, சர்க்கரை பாகு ஆகிய கலவை மூலம் ரசகுல்லா தயாரிக்கப்படுகிறது. சர்க்கரைப் பாகில் பந்து வடிவில் ஊற வைத்துக் கொடுக்கப்படுவதால் ரசகுல்லா தனித்துவமான சுவையுடன் இருக்கிறது. ரச என்றால் “சாறு” என்று அர்த்தம். குல்லா என்றால் “பந்து” என்று அர்த்தம். இனிப்புச் சாறில் மிதக்கும் பந்து வடிவம் என்பதால் இந்த இனிப்பு வகைக்கு “ரசகுல்லா” என்ற பெயர் ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற பூரி ஜெகன் நாதர் ஆலயத்தில் கடந்த சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இறைவனுக்கு ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதை சுட்டிக்காட்டி ஒடிசா அரசு ரசகுல்லாவுக்கு உரிமை கோரியது.

ரசகுல்லா எங்கு தோன்றியது என்பதில் கடந்த ஆண்டு சர்ச்சை உருவானது. மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய இரு மாநிலங்களும் ரசகுல்லாவுக்கு உரிமை கோரி புவிசார் குறியீடு ஒதுக்கக் கோரியது . ரசகுல்லா, தங்கள் மாநிலத்தின் கண்டுபிடிப்பு என ஆண்டுதோறும் ’ரசகுல்லா திவாஸ்’ என்ற பெயரில் ஒரு நாள் கொண்டாட்டங்களை ஒடிசா மாநில அரசு, கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடங்கியது. ஒடிசாவின் பூரி நகரில் 13-ம் நூற்றாண்டில் ரசகுல்லா இருந்ததாகவும், பூரி ஜெகன்னாதருக்கு, லட்சுமி தயார் ரசகுல்லா கொடுத்ததாக வரலாறு இருப்பதாகவும் ஒடிசா கூறிவந்ததைத் தொடர்ந்து , ரசகுல்லாவின் வரலாற்றைக் கண்டுபிடிக்க ஒரு தனி கமிட்டியே நியமிக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு ஒடிசாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அப்போதைய அமைச்சர் பிரதீப் குமார் கூறினார். ஆனால், ரசகுல்லா தங்கள் மாநிலத்தின் உணவே என்று கூறி மேற்குவங்கமும் களத்தில் இறங்கியது. இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று மேற்குவங்க மாநில உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் அப்துர் ரசாக் மோலா கூறியிருந்தார்.
ரசகுல்லா, திரிந்த பாலில் செய்யப்படுவது, திரிவடைந்த பாலானது சுத்தமில்லாததாக் கருதப்படும் நிலையில், அது கடவுளுக்குப் படைக்கப்பட வாய்ப்பே இல்லை என்று மேற்குவங்கம் வாதாடியது. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இனிப்பு தயாரிப்பாளர் நோபின் சந்திரதாஸ் , கடந்த 1868-ம் ஆண்டு ரசகுல்லாவைக் கண்டுபிடித்ததாகவும் அவரின் குடும்பத்தினர் ரசகுல்லா தயாரித்து விற்று வருவதாக மேற்கு வங்காள அரசு ஆதாரத்தை காட்டியது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி ரசகுல்லா இனிப்புக்கு புவிசார் குறியீடு உரிமையை மேற்கு வங்க அரசு பெற்றது.
ரசகுல்லா உரிமையை பெற்று ஓராண்டு நிறைவு பெற உள்ளதால், அந்த தினத்தை “ரசகுல்லா தினமாக கொண்டாட மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 14-ம் தேதியை ரசகுல்லா தினமாக கொல்கத்தாவில் கொண்டாட உள்ளனர்.

14-ம் தேதி அன்று கொல்கத்தா நியூடவுன் பகுதியில் இனிப்பு அரங்கம் உருவாக்கப்படும். அங்கு விதம், விதமான ரசகுல்லாக்கள் காட்சிக்காக வைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை ,இனிப்பு தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து அரசு அதிகாரிகளும் செய்து வருகிறார்கள்.

0 Comments

Write A Comment