Tamil Sanjikai

இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். அரிஹந்த் என்னும் 6 ஆயிரம் டன் எடை கொண்ட அணுசக்தி நீர்மூழ்கி போர் கப்பல் 2016-ம் ஆண்டு இணைக்கப்பட்டது. தொடர்ந்து 10 மாதங்கள் வரை கடலுக்கு அடியிலேயே இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பல் தனது வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த கப்பலில் இருந்தபடி கடல், வான், தரை இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை செலுத்தி துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். பக்கத்து நாடான சீனாவை இலக்காக கொண்டும் இது தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் வடிவமைப்பு, கட்டுமானம், ஏவுகணை இயக்கம் ஆகியவை அனைத்தும் உள்நாட்டின் தொழில்நுட்பத்தில் உருவானது. அதையடுத்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இத்தகைய தொழில்நுட்பத்தை கொண்டுள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்து உள்ளது. தனது வெள்ளோட்டத்தை ஐ.என்.எஸ். அரிஹந்த் நிறைவு செய்து இருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி, "நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக இந்த அணுசக்தி நீர்மூழ்கி போர் கப்பல் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை உருவாக்கிட ஒருங்கிணைந்து செயல்பட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இந்தியாவின் தைரியமான ராணுவ வீரர்கள், திறமை மற்றும் விடா முயற்சி கொண்ட விஞ்ஞானிகளால் இது சாத்தியமாகி இருக்கிறது. இனி இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கி போர்க்கப்பலின் திறன் பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அணு ஆயுத பலம் எங்களிடம் மட்டுமே இருக்கிறது என்று யாரும் இந்தியாவை மிரட்டவும் முடியாது. இதுபோன்ற அணுசக்தி பாதுகாப்பு இத்தருணத்தில் நமக்கு அவசியம் தேவை என்று அவர் தெரித்துள்ளார்.

0 Comments

Write A Comment