Tamil Sanjikai

தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அண்மையில் நடந்துமுடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது அனால் இதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான எந்திரங்களில் மட்டுமே கோளாறு ஏற்பட்டதாக அவர் கூறினார். எந்திரங்களில் கோளாறு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் முடிவு சாதகமாக வந்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி யாரும் குறை கூறுவதில்லை என்றும், ஆனால் பாதகமாக வந்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு என்று குறை கூறுவதையும் சுனில் அரோரா சுட்டிக்காட்டினார். மின்னணு எந்திரங்களை கால் பந்தாட்டத்தில் ‘டாஸ்’ போடுவதுபோல பயன்படுத்துவது தங்களை காயப்படுத்துவதாக அவர் கூறினார்.

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை இனி திரும்ப கொண்டு வர இயலாது என்றும் இப்போதுள்ள நடை முறையே தொடரும் என்றும் உறுதிபட தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அலுவலக ரீதியான முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா குறிப்பிட்டார்.

0 Comments

Write A Comment