Tamil Sanjikai

பண்பாடு மக்கள் தொடர்பகம் (லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்) என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த கருத்துகணிப்பு ஒன்று சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. ஆனால் வெளியிடப்பட்ட அந்த கருத்து கணிப்புக்கும், தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று லயோலா கல்லூரி விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து லயோலா கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பண்பாடு மக்கள் தொடர்பகம் (லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்) கள ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற தலைப்பில் அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைக்கும், எமது நிர்வாகத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், நடப்பு தேர்தல் மூலம் பிரதமராவதற்கான வாய்ப்பு யாருக்கு என்பது தொடர்பான அந்த ஆய்வறிக்கைக்கும் எமது நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த சில தேர்தல்கள் தொடர்பாக எமது நிர்வாகம் சார்பில் எவ்வித கருத்து கணிப்பும், ஆய்வறிக்கைகளும் வெளியிடவில்லை என்பதை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை. இதுபோன்ற தேர்தல் கணிப்புகளை வெளியிட எங்கள் நிர்வாகத்தில் எந்த துறைகளும் தற்போது இல்லை என்று உறுதியளிக்கிறோம். இதுபோன்ற கருத்து கணிப்புகளை லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை முற்றிலும் தவிர்க்க விழைகிறோம் என்று கூறினார்.

0 Comments

Write A Comment